Wednesday, March 18, 2009

ஒழிஞ்சிப்போ சனியனே

ஒழிஞ்சிப்போ சனியனே

“ஒழிஞ்சிப்போ சனியனே” என்று பக்கத்தில் இருந்த நாயை விரட்டினார் வீட்டு வெளி திண்னையில் சாப்பிட்டு கொண்டு இருந்த ராமசாமி. பின் தொடர்ந்தார்

“எத்தனை முறை சொல்லி இருக்கிறேன், சாப்பிடும் போது பக்கத்தில் வந்து நிக்காதேனு, உனக்கு தான் தட்டில் தனியாக இருக்குதே..... போ அப்படி” என்று தன்னுடைய நாய் ராமுவை விரட்டினார். அவர் சாப்பிட்டு விட்டு கையை கழுவி வாசலைலில் இருந்து இறங்கு பொழுது, வீட்டில் இருந்து குரல் வந்தது

“மாமா இருங்க, காபி எடுத்துனு வரேன்” என்றது ஒரு பெண்ணின் குரல். ராமசாமி அப்படியே அந்த திண்னையில் அமர்ந்தார். நாய் குரைக்க ஆரம்பித்தது

“ஏய் இரு போலாம், கொஞ்ச நேரம் கம்முனு இருக்க மாட்டியா, நேர நேரத்துக்கு எல்லாம் நடந்துடனுமா உனக்கு, திமிர் பிடிச்ச சனியனே, உன்னை கூட்டினு போய் பழக்கியது தப்பா போச்சு” என்று நாயை பார்த்து கடுகடுத்தார். உள்ளே இருந்து 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி கையில் காபியுடன் வந்தாள், நெற்றியில் போட்டு இல்லை, கழுத்தில் தாலி இல்லை, சாயம் போன புடவை, முகத்தில்
இளமையை தவிர எந்த அலங்காரமும் இல்லை. காபியை அவரின் பக்கத்தில் கொண்டு வந்து பயபக்தியுடன் வைத்தாள், அவரின் மருமகள் அன்னம். ராமசாமி அவளின் முகத்தை பார்க்கவில்லை, கடுகடு முகத்துடன் காபியை எடுத்து உறிஞ்சினார், அன்னம் வாசல் கதவுக்கு அந்த பக்கம் நின்றுக் கொண்டு இருந்தாள். ராமசாமி காப்பியை குடித்து முடித்து எழுந்தார், உள்ளே இருந்த அன்னம்

“மாமா வரும் பொழுது வயலில் இருந்து ஒரு வாழப்பழ தாரு வெட்டினுவாங்க, இன்னைக்கு அவரோட தெவசம்” என்றாள் பொறுமையாக.

ராமசாமி முகத்தை பார்க்காமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு, துண்டை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு தெருவில் நடக்க ஆரம்பித்தார், அவரை பின் தொடர்ந்து குரைத்ததுக் கொண்டே போனது நாய். மனதுக்குள் எதோ எதோ எண்ணங்கள் வந்து அவரை
ஆக்கிரமித்தன, இன்னையோட 2 வருடம் முடிஞ்சிப் போச்சு. அவனை தவம் இருந்து பெத்து வளத்து எமனுக்கு தாரை வாத்து கொடுத்து, இருந்த ஒரே பிள்ளை போனதும் மனைவியும் நோய் வாய்பட்டு இறந்து போனால். இப்பொழுது வீட்டில் ராமசாமியும், அவரின் மருமகளும் மட்டும் தான். தோட்டத்தில் வாழைத்தாரையும், இரண்டு வாழை இலையையும் அறுத்து அதை தோளில் சுமந்துக் கொண்டு வீட்டு திண்னையில் வைத்து விட்டு, சாத்தி இருந்த கதைவை தட்டி விட்டு அது திறக்க காத்து இருக்காமல். மறுபடியும் தெருவை நோக்கி நடந்தார் ராமசாமி, நாயும் தான். மனிதர் அந்த கிராமத்தில் மிகவும் மரியாதையாக வாழ்ந்தவர், மகனையும் மனைவியையும் பறிக் கொடுத்த பின்னர்
மனிதர் பேசுவதையே குறைத்துக் கொண்டார், குறிப்பாக மனிதர்களிடம் பேசுவதை. டீ கடையை நோக்கிச் சென்றார். ராமசாமி வருவதை பார்த்து டி கடையில் அமர்ந்து இருந்த அவரின் பக்கத்து வீட்டு முருகேசன் அப்படியே டீ கடையின் பின் பக்கம் மறைந்தான். ராமசாமி கடையை அடைந்தார், வாலிப பசங்க அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர், அதில் ஒருவன்

“பாத்தியாடா மாப்பிள, ஓநாயை பாத்தவுடன் எப்படி ஆடு எஸ்ஸாவுது பார்” என்று சிரித்தான்.......சிரித்தனர்.

ராமசாமியின் காதில் இது விழிந்தது, டி கடைக்கார பெரியவர் உடனே “டேய் காலி பசங்களா, வெள்ளன வேலைக்கு போகாமல் இங்க என்னடா நின்னு வெட்டி பேச்சு, போங்கடா வேலைக்கு” என்று அனைவரையும் துரத்தினார். பசங்களும் சிரித்துக் கொண்டே
போனார்கள், அதில் ஒருவன்

“ச்சே அவன் மச்சக்காரன் டா, எனக்கு பக்கத்து வீட்டுல இருக்கே ஒரு செவுட்டு கெளவி” என்றான் ராமசாமி காதில் விழுவது போல. ராமசாமிக்கு கோபமாக இருந்தது, நாயும் அவர்களை பார்த்து குரைத்தது. டீ கடைக்காரர் வெளியே வந்து ராமசாமியிடம்

“ஐயா அவனுங்க கடக்குறாங்க விருந்தாளிக்கு பொறந்த பசங்க, அவனுங்க பேச்சையில்லாம் எடுத்துக்காதீங்க, இந்தாங்க பேப்பர் படிங்க” என்று தினசரி பேப்பரை கொடுத்து விட்டு டீ கைக்குள் போனான். ராமசாமி சகஜநிலைக்கு திரும்பினார்

“சின்ராசு இரண்டு பிஸ்கேட் எடுத்து ராமுக்கு போடுயா, காலையில் இருந்து கத்தினே இருக்கு. தினமும் பழக்கப்படுத்தினது தப்பாக போச்சு, சரியா என்னை காலையில் எழுப்பி விடுது இந்த பிஸ்கட்டுக்காவே” என்று சிரித்தார், டீ கடை சின்ராசு சிரித்தான். பாட்டிலில் இருந்து பிஸ்கட்டை எடுத்து போட்டான் ராமு வாலை ஆட்டிக் கொண்டே சாப்பிட்டான், ராமசாமிக்கு டம்ளரில் டீ வந்தது, ராமுவுக்கு அவனின் தட்டில் டீ வந்தது. இருவரும் டீயை குடித்தார்கள்.

“சின்ராசு மச்சக்காள வந்தானா?” என்றார் ராமசாமி.

“இல்லைங்க வர நேரம் தான் வந்துடுவார்” என்றான் சின்ராசு, மச்சக்காளை ராமசாமியின் பால்ய சிநேகிதன். இருவரும் சேர்ந்து தான் எங்கும் போவார்கள். மச்சக்காளை டீ கடைக்கு வந்தார்,

“வாடா பாவி உனக்கு நூறு வயசுடா இன்னும் நாப்பது வருஷம் உயிருடன் இருந்து யார் குடியை கெடுக்கப் போறீயோ” என்று சிரித்தார் ராமசாமி.

“அடப்பாவி நான் யார் குடியை டா இதுவரை கெடுத்து இருக்கேன், தனியா தானடா எனக்குனு மில்டரி சரக்கு வாங்கி வச்சி இருக்கேன்” இருவரும் சிரித்தார், சின்ராசும் சிரித்தான். சின்ராசு

“ஐயா நீங்க வந்தீங்கனா தான், அவர் முகத்துல சந்தோஷமே, இதுவரை மனசு கஷ்டப்பட்டுனு இருந்தார்ங்க” என்றான். உடனே மச்சக்காளை கோபத்தோடு

“என்னடா இன்னைக்கு அவங்க வம்பு வளத்தான்களா? .......ளி குடும்பத்தோடு கொளித்துடுறேன் அவங்கள” என்றார் ஆவேசமாக. அவரை ராமசாமி அவசரத்துடன் தடுத்தார்.

“வேண்டாம் மச்ச, அவனுங்க கிடக்குறானுங்க. நம்ம சின்ன வயசுல பண்ணாததா?” என்று சிரித்தார்.

“என்னடா பேசற, நம்ம வீட்டு பொண்ணை பத்தி தப்பா
பேசறாங்க,........ளி வெட்ட வேணாம் அவனுகள” என்று கொந்தளித்தார். ராமசாமி அவசரமாக கடையை விட்டு நடக்க ஆரம்பித்தார், ராமுவும் வால் ஆட்டியபடியும், மச்சக்காளை வாலை ஆட்டாமலும் பின் தொடர்ந்தனர். ராமசாமி நேராக மாமர நிழில் போய் நின்றார், அங்கு இருந்த கைத்து கட்டிலில் போய் தலையை சாய்த்த படி அமர்ந்தார். மச்சக்காளை அவரிடம் போய்

“டேய் ராமா எதாவது என்னிடம் நீ மறைக்கிறாயா?” என்றார் தோளை உலுக்கி. ராமசாமி அவரின் முகத்தை பார்க்காமல் துண்டால் தன்னுடைய முகத்தை மூடிக் கொண்டார்.

“சொல்லு ராமா, நான் எதாவது உதவி செய்யனுமா” என்று ராமசாமியின் முகத்தில் இருந்த துண்டை இழுத்தார். ராமசாமி அதை அழுத்தி முகத்தில் மூடிக் கொண்டு சத்தம் இல்லாமல் அழுதார். மச்சக்காளைக்கு விஷயம் புரிந்து விட்டது, தலையை தொங்கப் போட்டப்படி
தரையில் அமர்ந்தார்.

“பேசாமல் அவளுக்கு வேறு இடத்துல கல்யாணம் செஞ்சி கொடுத்துடு டா, ராமா” என்றார். ராமசாமி முகத்தில் இருந்து துண்டை விலக்கினார், மச்சக்காளையின் வார்த்தையை கேட்டுவிட்டு. தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“இரண்டாவது கல்யாணம் நா, யார்டா இவளை கல்யாணம் செய்துப்பா சொல்லு” என்றார் கண்களில் வரும் நீரை துடைத்துக் கொண்டு.

“இல்லன்னா எல்லா நாயும் இந்த மாதிரி எதாவது கதை சொல்லினு தான் இருக்கும், பொய்யினாலே உண்மை மாதிரி பேசுவானுங்க, இதில உண்மையினா .....ளி குடும்பத்தையே அழிச்சுடுவாங்க. சரி உனக்கு தெரியும்னு உன் மருமகளுக்கு தெரியுமா, யார் அந்த பையன்”

“ரொம்ப நாளாய் நடக்குது இது, என் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற, கந்தசாமியின் மூணாவது பையன் தான், அவனை சொல்லி தப்பு இல்ல, என்வீட்டு முண்டையை சொல்லனும், அவகிட்ட நான் பேசுவதே கிடையாது. இவளுக்கு என்ன திமிரு பாருடா, வரக் கோவத்துக்கு அவளை அருவாலால் ஒரே போடு, சாவட்டும் முண்ட” என்று கோபமாக சொன்னார் ராமசாமி. மச்சக்காளை ராமசாமியின் கண்களை நேராக பார்த்து விட்டு,

“டேய் ராமா நான் ஒண்ணு சொல்லுவேன், நீ தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது”

“ம்ம்ம்ம்”

“நாம் லட்சுமி (ராமசாமியின் மனைவி) செத்து எத்தனை வருஷம் ஆவுது, அவள் இல்லாமல் நீ எவ்வளவு படுறீயே? ஏன்?”

“என்னடா கேள்வி இது, 30 வருஷ பந்தம் டா அது”

“அதே தான் நானும் கேட்கிறேன், கல்யாணம் ஆகி ஒரே வாரத்தில் புருஷனை பறி கொடுத்த பெண்னை இப்படி காலம் காலமாக வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து பத்தினியா இருனு சொன்னா எப்படி டா”

“அதுக்கு ஊர் மேயனுமா??”

“ராமா, கொஞ்சம் மனிஷனா யோசிச்சி பாருடா, சின்ன பொண்ணு அவளுக்கு ஆசை பாசம்மு எவ்வளவோ கனவுடன், கல்யாண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்து இருக்கும். அதோட விதி இப்படி எழுதிட்டான் ஆண்டவன்.......”

“இப்ப என்ன செய்ய சொல்ற”

“அவளுக்கு வேறு கல்யாணம் செய்து வை, இதுவே இவ செத்து உன் புள்ளையா இருந்தா அவனுக்கு இரண்டாவது மாசத்துலேயே கல்யாணம் செய்து வைத்து இருக்கமாட்ட, அனாதப்பொண்ணு அவளை இப்படி விடாதடா”

“என்னடா முட்டா.... மாதிரி பேசற, நம்ம ஜாதியில் யார் அவளை இரண்டாந்தாரமா கட்டிப்பா, அவளை அனுப்பி வைத்து விட்டு நான் சொத்துக்கு என்ன செய்றது” என்றார் கோபமாக.

“...........ளி அப்படி சொல்லு, இவ்வளவு சுயநலமா இருக்கற நீ, அப்ப எல்லாதையும் பொறுத்துனு தான் போகணும், புரியுதா?” என்றார் மச்சக்காளை கோபமாக.

“என்னடா இப்படி சொல்ற, சத்தியமா சுயநலம் எல்லாம் ஒண்ணும் இல்லைடா, சரி இப்ப என்ன செய்ய சொல்ற” என்றார் ராமசாமி தலையில் கைவைத்துக் கொண்டு.

“எல்லாதையும் கண்டும் காணாம இரு, ஒருநாள் அவளுக்கே இது தப்புனு படும், அப்ப அவளே நிறுத்திடுவாள். இந்த நாயிக்கு காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது உன் மருமகளுக்கு காட்டு” என்றார் மச்சக்காளை பொறுமையாக ராமசாமியின் தோளை பிடித்தபடியே,
நாய் மரத்து அடியில் படுத்துக் கொண்டு இவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தது. ராமசாமி அறை மனதாக அந்த இடத்தை விட்டு புறப்பட்டார், மதியானம் 12 மணி ஆகி இருந்தது, வீட்டை நோக்கி நடந்தார், மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் தோன்றின
மச்சக்காளை சொன்னது நினைவில் வந்துக் கொண்டே இருந்தது. வீட்டை நோக்கி நடந்தார். வீட்டின் கதை தட்டினார், திறந்து தான் இருந்தது. உள்ளே சென்றார் வீட்டிற்கு நடுவில் தன்னுடைய மகனின் போட்டோவின் எதிரில் படையல் வைத்து இருந்தது.

“வாங்க மாமா, கையை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றாள் அன்னம். எதுவும் சொல்லாமல் கையை கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தார் ராமசாமி. மச்சக்காளையின் வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இலையில் உணவு பரிமாறப்பட்டது

// சுயநல பிடித்தவன் டா நீ, // //புருஷனை ஒரே வாரத்தில் இழந்தவள்// //அவளுக்கு ஆசை உணர்ச்சி எல்லாம்// ராமசாமியின் மனதுக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தது. ராமசாமியின் பக்கத்தில் வந்து ராமு நாய் மண்டிப் போட்டு உக்கார்ந்தது.

//23 வயசு சின்ன பொண்ணுடா அது பாவம்// இலையில் கையைவைத்து சாப்பாட்டை பிசைய ஆரம்பித்தார்.“மாமா சாம்பார்
ஊத்தட்டுமா”. //எதையும் கண்டுக்காம இருடா ராமா//. நாய் வல் வல் என்று குரைக்க ஆரம்பித்தது. “ம்ம்ம் ஊத்து” என்றார். மருமகள் சாம்பாரை ஊற்றினாள். நாய் வல் வல் என்று குரைத்தது ஒரு முடிவுக்கு வந்தவராக ராமசாமி தன்னுடைய இலை சாப்பாட்டில் இருந்து ஒரு கை பிடியை எடுத்து, அன்னத்தை பார்த்தபடி

“இந்தா ஒழுஞ்சிப்போ சனியனே” என்று ராமுவின் முன் வைத்தார்.

2 comments:

  1. நல்லா இருக்கு தக்ஸ்!@!

    வலையுலகிற்கு வரவேற்புகள்!

    முதலில் Comment Form ஐ மாத்து!

    http://www.tamilmanam.net தளத்திற்குச் சென்று உனது வலைப்பதிவை சேர்த்து,

    http://www.tamilish.com இன் ஓட்டு பெட்டியை வாங்கி வைத்துக் கொள்,

    http://www.newspanai.com
    http://www.ntamil.com
    http://www.valaipookal.com

    இவற்றில் எல்லாம் பதிந்து கொள்.... எல்லாரும் ஓட்டு பெட்டி கொடுப்பார்கள்,. அதை வாங்கி வைத்துக் கொள்ளாதே... ஓட்டுகள் பிரிந்துவிடும்! தமிழிஷ், தமிழ்மணம் மட்டும் வைத்துக் கொள்!

    ப்ளாக்கர் விட்ஜெட்களை சேர்த்திக் கொள்! உதாரணம் வேண்டுமெனில் எனது ப்ளாக்கைப் பார் (http://www.aadav.blogspot.com)

    வலைக்கு பதிவதில் உள்ள சிறப்பு, நல்ல பிரபலமான எழுத்தாளர்கள் உன் கதையைப் படிப்பார்கள்!!! அது உன் கையில்தான் இருக்கிறது!!

    மேலதிக தகவல் வேண்டுமெனில் எனக்குக் கூப்பிடு!!

    ReplyDelete
  2. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    ReplyDelete